வேலூரில் பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூரில் பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மாணவியின் போலி சான்றிதழ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய அலுவலர் பிரியங்கா, சமூகநல பணியாளர் சாந்தி, சைல்டுலைன் பணியாளர் மணிசேகர் மற்றும் வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், கொசப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் நடத்தி வரும் 33 வயது வாலிபருக்கும் வருகிற 26-ந் தேதி திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. அதையடுத்து சமூக நல அலுவலர்கள் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர். அப்போது 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அப்போது பெண்ணின் வீட்டார் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது என்று பிறப்பு சான்றிதழை காண்பித்தனர். இதுதொடர்பாக சமூக நலஅலுவலர்கள் அந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.

அதில் அந்த சான்றிதழ் போலியானது என்பதும், சிறுமிக்கு திருமணம் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே ராணிப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் போலியான சான்றிதழ் பெற்று, அதன் மூலம் வேலூர் மாநகராட்சியில் 13 வயது சிறுமிக்கு தற்போது 19 வயது என்று பிறப்பு சான்றிதழ் பெற்றதும், தற்போது ஆதார் அட்டைக்கும் விண்ணப்பித்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து சமூக நலஅலுவலர்கள் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை காட்பாடி செங்குட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு போலி சான்றிதழ் வாங்கியது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com