பனப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

பனப்பாக்கம் அருகே தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
பனப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

பனப்பாக்கம், அக்.15-

பனப்பாக்கம் அடுத்த பெருவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்னபாஸ் (வயது 50), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (45). இவர்களுக்கு பபிதா (10) என்ற மகளும், ராகுல் (9), ஜான் (7) என்ற இரு மகன்களும் உண்டு.

ராகுல், அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். பின்னர் அவன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றான்.

கடந்த சில நாட்களாக பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நண்பர்களுடன் விளையாட சென்ற ராகுல், ஏரிக்கு வரும் தண்ணீரை வேடிக்கை பார்க்க அங்கு சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக ராகுல் கால் தடுமாறி ஏரியில் விழுந்தான்.

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய ராகுலை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராகுல் இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து ராகுல் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெருவளையம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com