

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கண்களை துணியால் கட்டி கொண்டு சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளும் பயிற்சி பெற்றிருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களை ஒரு துணியில் கட்டிவிட்டனர். பிறகு ஆசிரியர்கள் கைவிரலை காட்டி இது எத்தனை என்று கேட்டபோது சரியாக பதில் கூறினார். ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அந்த நோட்டின் வரிசை எண்கள் போன்றவை குறித்த விவரங்களை அவர் சரியாக கூறினார். இதைக்கண்டு பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து மாணவர் தண்டபாணி நிருபர்களிடம் கூறுகையில், நான் இந்த பயிற்சியை 2 மாதத்தில் கற்று கொண்டேன். பயிற்சி செய்யும் முன்பு அரை மணி நேரம் உடல் பயிற்சியும், அரை மணி நேரம் தூங்கவும் வேண்டும். பிறகு என்னை சுற்றி நிற்பவர்களை பற்றி துல்லியமாக சொல்லமுடியும். பயிற்சியின்போது அசைவ உணவை தவிர்க்க வேண்டும். படிப்பில் பின்தங்கிய நான், தற்போது முதல் மாணவனாக பயின்று வருகிறேன். அரசு அனுமதித்தால் நான் கண்ணை கட்டிக்கொண்டு தேர்வு எழுத தயாராக உள்ளேன் என்றார்.