அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது

அரியலூரில் அரசு பள்ளியில் படித்துவரும் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது
Published on

ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி காந்தி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60), இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் அவர் வேலை செய்யும் பள்ளியில் துப்புரவு பணியாளராகவும், மற்றொருவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் துப்புரவு பணியாளராக உள்ளனர்.

இதற்கிடையே கந்தசாமி தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் பள்ளி இடைவேளை நேரங்களில் கழிவறைக்கு சென்று வரும்போது அவர்களை நெருங்கி சென்று ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

கந்தசாமியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் அவரால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறினர். அவர்கள் இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது கந்தசாமி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவரது மனைவி வேலை செய்யும் விடுதிக்கும் கந்தசாமி, அவரை அழைக்க சென்று வந்துள்ளார். இதனால் அங்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com