

வால்பாறை தாலுகா பகுதியில் 11 அரசு நடுநிலை மற்றும் தொடக்க நிலை பள்ளிகளும், 48 ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்க நிலைப்பள்ளிகளும், 21 அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் தொடக்க நிலை பள்ளிகளும், 5 அரசு ஆதிதிராவிடர் நடுநிலை மற்றும் தொடக்க நிலை நலப்பள்ளிகளும், 1 உண்டு உறைவிடப்பள்ளியும் என மொத்தம் 86 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் ஆண்டுக்கு ஆண்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக வால்பாறை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், போதிய சம்பளம் இல்லாமை, வனவிலங்குகளின் தாக்குதல், தங்களது பிள்ளைகள் வெளியூர்களில் வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வால்பாறை பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.இதனால் எஸ்டேட் பகுதி பள்ளிக் கூடங்களிலும் மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள 86 பள்ளிக்கூடங்களிலும் சேர்த்து சுமார் 2020 மாணவ, மாணவிகள் தான் படித்து வருகின்றார்கள். பல பள்ளிக்கூடங்களில் போதிய ஆசிரியர்கள் இருந்தும் படிப்பதற்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை டேன்டீ எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான சின்னக்கல்லார் பகுதியில் ஆரம்ப காலத்தில் அதிகப்படியான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 300 தொழிலாளர் குடும்பத்தினர் அந்த பகுதியில் வசித்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, மாணவ-மாணவிகள் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நடப்பாண்டில் சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளியான ராஜலட்சுமி என்பவர் தனது மகன் சிவா (வயது 5)வை அந்த பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்க விரும்பினார். ஆனால் அங்கு இருந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் கவலை அடைந்தார். இந்த நிலையில் அவர், பள்ளிக்கூடத்தை திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து அந்த பள்ளிக்கூடத்தை திறக்க அவர்கள் முடிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிவா என்ற ஒரு மாணவருக்காக திறந்தனர். இதனை அறிந்து மகிழ்ச்சி அடைந்த ராஜலட்சுமி, தனது மகன் சிவாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் தலைமை ஆசிரியரிடம் பேசி மகனை பள்ளியில் சேர்த்தார்.