ரெயில்வே உணவகத்தில் முறைகேடு: லல்லுபிரசாத், மகனுக்கு சி.பி.ஐ. சம்மன்

ரெயில்வே உணவகத்தில் முறைகேடு செய்ததில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லுபிரசாத் 11-ந்தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ரெயில்வே உணவகத்தில் முறைகேடு: லல்லுபிரசாத், மகனுக்கு சி.பி.ஐ. சம்மன்
Published on

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவ் 2004 ஆண்டு முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். ரெயில்வே மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் அவர் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

ரெயில்வே உணவக ஓட்டல்களுக்கு அனுமதி கொடுத்ததில் ஊழல் நடந்து இருந்தது. 2006-ம் ஆண்டு ராஞ்சி, பூரியில் உள்ள ஓட்டல்களுக்கு ஒப்பந்தம் கொடுத்ததன் மூலம் பினாமி பெயரில் சொத்துக்களை பெற்றதாக லல்லு மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதல்- மந்திரியான ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி, சர்லாகுப்தா, தனியார் ஓட்டல் நிர்வாக இயக்குனர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் மீது கடந்த ஜூலை 7-ந்தேதி சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 11-ந்தேதி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இதேபோல லல்லுவின் மகன் தேஜஸ்வி 12-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.

லல்லுபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு, மாட்டு தீவன வழக்குகள் உள்ளன. இதில் அவர் தண்டனையும் பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினர் தற்போது பினாமி சொத்து தொடர்பாக வருமானவரி, அமலாக்கத் துறை கண்காணிப்பில் சிக்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com