

புதுடெல்லி:
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது என்றும், இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியது.
வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும், இதற்கான சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.