

புதுடெல்லி:
ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சிபு சோரனின் உதவியாளர் சசிநாத் ஜா, கடந்த 1994-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக சிபு சோரன் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு, சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மற்ற 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சிபு சோரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் ஜாவின் உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் அமர்வு, சிபு சோரனை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நேற்று உறுதி செய்தது.