மும்பை தொடர் குண்டுவெடிப்பில் கைதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை நகரில் 13 இடங்களில் தொடர்ச்சியாக வெடித்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுடெல்லி:

மும்பை நகரில் 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 728 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை மும்பை தடா கோர்ட்டு விசாரித்தது. இதில் தொடர்புடைய தாகிர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இன்னொரு குற்றவாளியான அபு சலீமுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாகிர் மெர்ச்சண்ட் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.எம். சாந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கைதியின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள தடா கோர்ட்டின் சாட்சியங்களின் ஆவணங்கள் அனைத்தையும் 6 வாரத்துக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்யும்படியும் கூறியது. இதேபோல் மனுதாரருக்கும் ஒரு நகலை வழங்குமாறும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com