நரபலி வழக்கில் கணவன் - மனைவியின் மரண தண்டனையை நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரின் ருயாபந்தா பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு போஷன் சிங் ராஜ்புத் என்பவரின் 2 வயது மகன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது காணாமல் போய்விட்டான். எங்கு தேடியும் குழந்தை கிடைக்க வில்லை.
சிறிது நேரம் கழித்து அவர்கள் தெருவில் உள்ள இஷ்வாரி லால் யாதவ் என்பவர் வீட்டிலிருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஈஸ்வரி லால் யாதவ் மற்றும் அவருடைய மனைவி கிரண் பாய் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 4 பேர் மைனர் ஆவர்.
12 பேர் மீது குழந்தை கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கணவன் - மனைவி தவிர மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை குறைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து மரண தண்டனையை எதிர்த்து கணவன்-மனைவி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், கணவன் - மனைவிக்கு கொடுக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

