சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் முடிந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Sabarimala
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு
Published on

புதுடெல்லி:

சபரிமலையில் வயது பாகுபாடின்றி பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்னர் நடந்து வந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு விசாரித்த இந்த வழக்கில், கேரள அரசு, தேவசம் போர்டு, ஆன்மீக அமைப்புகள் தனித்தனியாக தங்களது வாதங்களை தாக்கல் செய்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என கூறியிருந்தனர்.

குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்கு வருவது ஆகம விதிகளை மீறுவது என தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில், அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை 7 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com