

தற்கொலை விளையாட்டு என அழைக்கப்படும் நீல திமிங்கலம் (புளூவேல்) விளையாட்டு இந்தியாவிலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி பலரின் உயிரை பலி கொண்டு வருகிறது. இந்த கொடூர விளையாட்டுக்கு தமிழகத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விளையாட்டுக்கு அரசு தடை விதித்து உள்ளது.
எனினும் இந்த விளையாட்டை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி பொன்னையா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக தூர்தர்ஷன் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
அதாவது இந்த நாசகார விளையாட்டின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, தங்கள் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒளிபரப்புமாறு டி.வி. சேனல்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரத்தை தேசிய பிரச்சினையாக கருதுவதாக கூறிய நீதிபதிகள், இதை சரியான முறையில் கையாள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.