செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா வேகத்தை சமாளிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

செஞ்சூரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் #SAvPAK
செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா வேகத்தை சமாளிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்
Published on

இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். 2-வது ஓவரை ரபாடா வீசினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் இமாம்-உல்-ஹக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

அடுத்து பகர் சமான் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். பகர் சமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஷான் மசூத் 19 ரன்னில் வெளியேறினார். அசார் அலி தாக்குப்பிடித்து விளையாட ஆசாத் ஷபிக் 7 ரன்னில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அகமது (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

மறுமுனையில் நின்றிருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். ஸ்டெயின் வீசிய ஓவரில் நான்கு பவுண்டரிகள் விரட்டினார்.

அணியின் ஸ்கோர் 178 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் ஹசன் அலி உடன் இணைந்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசன் அலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com