

சனா:
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹொடைடா நகரின் அருகே முகாமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல், செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் ஹவுத்தி போராளிகள் பின்வாங்கினர். இதையடுத்து ஹொடைடா விமான நிலையத்தை சவுதி கூட்டுப்படையினர் இன்று கைப்பற்றினர். விமான நிலையத்தை சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஹவுத்தி போராளிகளின் பிடியில் இருந்து விமான நிலையம் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஏமன் ராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது மூன்று ஆண்டுகால உள்நாட்டுப் போரில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.