நாங்கள் எடுத்த நடவடிக்கை சரியே: ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை- அரியானா முதல்வர்

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்து, வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் எடுத்த நடவடிக்கை சரியே: ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை- அரியானா முதல்வர்
Published on

புதுடெல்லி:

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது, சமீபத்தில் அரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான் அறிக்கையை அமித் ஷாவிடம் அளித்தார். அதன்பின்னர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறோம். எங்களின் இலக்கை அடைந்து விட்டோம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாங்கள் எங்கள் வேலையில் திருப்தி அடைகிறோம். நாங்கள் செய்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியே. அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

தேரா சச்சா சவுதா அமைப்பு விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றன. சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் கிடையாது. தேரா சச்சா அமைப்புடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. தேரா சச்சா அமைப்பு தலைவருக்கு சிறையில் வி.ஐ.பி. அந்தஸ்து வழங்கப்படுவது என் வெளியான தகவல் தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என சமீபத்தில்  அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் பலியானார்கள். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. பின்னர் இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com