மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த அண்ணன் தம்பி பலி: மகன்கள் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

சாத்தான்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மகன்கள் இறந்த சோகத்தில் தந்தையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த அண்ணன் தம்பி பலி: மகன்கள் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் மரணம்
Published on

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் கோயில்மணி(60). இவர் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் விஜய். இவருக்கு திருமணமாகவில்லை.

விஜய் கோவையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயின் அண்ணன் ராஜா புதூரில் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். விஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த விஜய் கோவையிலிருந்து புதூருக்கு வந்து கடந்த 20-ம் தேதி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான அவரது சகோதரர் ராஜா குடும்ப பிரச்சனையால் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் தம்பி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த வி‌ஷம் கலந்திருந்த மதுவை சாதாரண மது என நினைத்து குடித்து விட்டார். சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா 20-ந் தேதி இறந்தார். பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் 22-ந் தேதி இறந்தார்.

இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோயில்மணி வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சரியாக சாப்பிடாமல் இருந்துவந்தாராம். சம்பவத்தன்று அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் புதூருக்கு தகவல் கொடுத்தனர்.

உறவினர்கள் சென்று அவரை மீட்டு வந்து உடன்குடி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கோயில்மணி பரிதாபமாக‌ இறந்தார். ஒரே வீட்டில் 10 நாட்களுக்குள் 2 மகன்கள், தந்தை இறந்தது அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ள‌து.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com