

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது கணவர் நடராஜன் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரைப் பார்ப்பதற்காக சசிகலா தரப்பில் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கணவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள 15 நாட்கள் பரோலில் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை சிறைத்துறை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். போதிய ஆவணங்களுடன் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும்படி சசிகலாவிடம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து பரப்பன அக்ரகார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகர் கூறியதாவது:-
சசிகலா பரோல் மனுவில் முழுமையான விவரங்கள் இடம் பெறவில்லை. அந்த மனுவில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. மேலும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனை உள்ள பகுதியைச் சேர்ந்த கெஜட்டட் ரேங்க் உள்ள அதிகாரி நடராஜன் ஆஸ்பத்திரியில் உள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழ் சசிகலா பரோல் மனுவுடன் இணைக்கப்படவில்லை.
இதனால் அவரது பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அதிகாரி சான்றிதழ் மற்றும் தேவையான பிரமாண பத்திரங்கள், முழு விவரங்களுடன் மீண்டும் புதிதாக மனுதாக்கல் செய்தால் பரோல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய மனு தாக்கல் செய்வது குறித்து தினகரனின் ஆதரவாளரும், வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியதாவது:-
சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். புதிய ஆவணங்களுடன் மனுதாக்கல் செய்யும்படி அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சில கேள்விகளையும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அதுபோல சில ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். புதிய ஆவணங்களுடன் பரோல் மனு தாக்கல் செய்யப்படும்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கேட்டுள்ள கேள்விகள் என்ன என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-
பொதுச்செயலாளர் சசிகலா 6 மாதங்கள் சிறை வாசம் முடிந்து எளிய சிறிய தண்டனை பட்டியலில் உள்ளார். அவர் பரோல் கோர உரிமை பெற்றவர்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை குறித்த மருத்துவமனை அளித்த முழுமையான சான்றிதழ்களை சிறை அதிகாரியிடம் வழங்கி விட்டோம். மற்ற வழக்குகளில் அவருக்கு தண்டனை இல்லை என்பதையும் சான்றுகளுடன் முறைப்படி எங்களது வழக்கறிஞர்கள் அசோக், கிறிஸ்டப்பன் ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இவை அனைத்தையும் சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து பரிசீலனை நடைமுறைகளையும் முடித்து விட்டனர்.
எனவே சசிகலா விரைவில் பரோலில் வருகிறார். சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டதாக திட்டமிட்டு வேண்டுமென்றே புரளி கிளப்பி விட்டுள்ளனர். அவருக்கு பரோல் கிடைப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.