

சென்னை:
கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது, ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளை அணிகள் இணைப்புக்காக, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி முன் வைத்தது.
இந்தநிலையில், கட்சியில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவினை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணி நேற்று எடுத்துள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க. அம்மா அணி மற்றும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி ஆகியவற்றின் இணைப்புக்கான காலம் நெருங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
டி.டி.வி.தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், அவருடைய ஆதரவாளர்களான அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.க்கள் கே.பாண்டியராஜன், செம்மலை, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பிளவு அடைந்துள்ள அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்பு குறித்தும், கட்சியினுடைய வளர்ச்சி பணிகள் குறித்தும், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசுக்கு எப்படி எடுத்து சொல்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- டி.டி.வி.தினகரன் அறிவித்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணிகள் இணைப்புக்கான சாத்தியம் இருக்கிறதா?
பதில்:- ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி நடைபெற்றுக்கொண்டிருக்கிற தர்மயுத்தத்தில் முதல் நிபந்தனை ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். 2-வது நிபந்தனை சசிகலாவின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றவேண்டும் என்பது தான். இந்த 2 நிபந்தனைகளையும் நிறைவேற்றும் பட்சத்தில் அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் என்று தெரிவித்திருந்தோம். டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர். அவர் கட்சியில் உறுப்பினரே இல்லை என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதன் அடிப்படையில் அந்த செயல்பாட்டில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் தற்போது வெளியேற்றுவதாக சொல்கிறார்கள்.
கேள்வி:- உங்களுடைய முதல் கோரிக்கையை ஏற்கும் விதமாக ஆரம்ப நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினரின் அறிவிப்பு இருக்கிறதா?
பதில்:- இப்போதுதான் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த விழிப்பு, டி.டி.வி.தினகரனோடு மட்டும் இல்லாமல் சசிகலாவை, அவருடைய குடும்பத்தோடு சேர்த்து வெளியேற்றும் முடிவாக இருந்தால், நாங்கள் அவர்களை பாராட்டுவதற்கு கடமை பட்டிருக்கிறோம்.
கேள்வி:- அணிகள் இணைப்புக்காக, பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதா?
பதில்:- எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு நபரை அவர்கள் வெளியேற்றியிருக்கிறார்கள். மற்றவர்களை வெளியேற்றும்பட்சத்தில் தொடர்ந்து எங்களுடைய நிலைப்பாடு இருக்கும். சசிகலா குடும்பத்தை முழுவதுமாக வெளியேற்றினால் தான் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பதில் மாற்று கருத்து இல்லை.
இவ்வாறு கே.பி.முனுசாமி பதில் அளித்தார்.