

பெங்களூரு:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட சசிகலாவின் நெருங்கிய உறவினரான டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த ஓட்டு எண்ணிக்கை குறித்த செய்திகளை பெங்களூரு சிறையில் உள்ள டி.வி.யில் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் பார்த்து சசிகலா தெரிந்து கொண்டார்.
அவர் காலை முதலே டி.வி.யின் முன்பு அமர்ந்து இந்த ஓட்டு எண்ணிக்கை தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்தப்படி இருந்தார் என்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வட்டாரங்களில் கூறப்பட்டன. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சசிகலா வேதனை அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று இருப்பதை அறிந்து சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வெற்றியை கொண்டாடினார். நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலா முகத்தில் ஒரு மகிழ்ச்சியை பார்க்க முடிந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இளவரசியும் இந்த இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினார் என்று சொல்லப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்த வெற்றி சசிகலாவுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஓரிரு நாட்களில் சிறைக்கு வந்து சசிகலாவை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.