சசிகலா-குடும்பத்தினர் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு: 8 பேர் மீது குற்ற நடவடிக்கை

சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் அனுப்பி உள்ளனர்.
சசிகலா-குடும்பத்தினர் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு: 8 பேர் மீது குற்ற நடவடிக்கை
Published on

சென்னை:

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், போலீசார் என 1800 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து தமிழ் நாடு, புதுவை, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங் களில் 187 இடங்களில் சோதனை மேற்கொண்டார்கள்.

இந்த அளவுக்கு அதிகாரிகள் முற்றுகையிட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இதனால் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கருப்பு பண ஒழிப்பு வேட்டை என வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

4 நாள் வேட்டையில் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, அவர் நடத்தும் பெண்கள் கல்லூரி விடுதியின் பூட்டப்பட்ட அறைகள் ஆகியவற்றில் தான் மிகப்பெரிய அளவில் சோதனை நடந்தது.

100-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் 50 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கம், தங்கம்-வைர நகைகள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் 14 கார்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.

திவாகரனை அதிகாரிகள் கல்லூரிக்கு வரவழைத்து அவர் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பட்டியலிட்டு அதில் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதேபோல் சென்னையில் தி.நகரில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, மகன் விவேக்கின் வீடு, அவர் நிர்வாகியாக பொறுப்பு வகிக்கும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வீடு ஆகிய இடங்களில் நடந்த சோதனையும் குறிப்பிடத்தக்கவை.

இந்த இடங்களில் எல்லாம் பெருமளவில் நகை, கறுப்பு பணம் சிக்கியுள்ளது. போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் பல கோடி பணம் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இங்கு சிக்கியவைகளையெல்லாம் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். சோதனை தொடர்பாக முதல் கட்ட அறிக்கை மத்திய வரி விதிப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் சசிகலா, திவாகரன், கிருஷ்ணபிரியா, விவேக் உள்பட 8 பேர் மீது குற்ற நடவடிக்கை மேற் கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வரி ஏய்ப்பு மட்டும் அல்லாது, போலி நிறுவனங்கள் பெயரில் நிலம் வாங்கி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான கணக்குகள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், நகைகள் அனைத்தும் வரி ஏய்ப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. எனவே தான் வருமான வரித்துறை தனது சோதனை அறிக்கையை மத்திய வரிகள் விதிப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைத்து உள்ளது.

இதில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சசிகலா குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டாலும் வருமான வரி சோதனைக்கு உட்பட்ட அனைவருக்கும் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

தொடர்ந்து அனைவரது மீதும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் எத்தனை கோடி பணம் சிக்கியது, நகைகளின் மதிப்பு போன்றவற்றை அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள். இது முடிந்த பின்புதான் சரியான விவரங்கள் வெளியாகும்.

தற்போது அன்றைய தினம் நடைபெற்ற சோதனை விவரங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது. சோதனை நீடிப்பதால் அது முடிந்த பின்பு தான் முழுமையான தகவல் தெரியவரும். இப்போதைக்கு ரூ.1,500 கோடி சொத்துக்கான ஆவணங்களும், 60 போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

போலி நிறுவனங்கள் தொடர்புடைய 100 வங்கி கணக்குகள் உள்பட மொத்தம் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. போலி நிறுவனங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் 150 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com