சசிகலா அணிக்கு ஒருபோதும் திரும்ப மாட்டேன்: சரவணன் எம்.எல்.ஏ.

ஓ.பி.எஸ். இருக்கும் இடம்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும் சசிகலா அணிக்கு ஒருபோதும் திரும்பமாட்டேன் எனவும் சரவணன் எம்.எல்.ஏ. கூறினார்.
கோவில் விழாவில் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா-சரவணன்.
கோவில் விழாவில் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா-சரவணன்.
Published on

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து தனி அணி உருவாக்கியபோது மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச்சென்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் சரவணன், சசிகலா மீது கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்ததாக போலீசில் புகார் கொடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு மதுரை மாவட்டத்தில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ஒருவரையொருவர் சந்திப்பதை தவிர்த்தனர். அரசு விழாக்களில்கூட பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதில்லை.

இந்த நிலையில் மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் உள்ள வடக்கு சிவன்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எடப்பாடி அணி ஆதரவு எம்.எல்.ஏ.வான ராஜன்செல்லப்பாவுடன் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கோவில் சார்பில் அவர்கள் இருவருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை சரவணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி அ.தி.மு.க. இரு அணி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரவணன் எம்.எல்.ஏ. விரைவில் அணி மாறிவிடுவார் என்றும் சிலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சரவணன் எம்.எல்.ஏ. “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

நேற்று மதியம் எனது சமுதாய மக்களின் அழைப்பை ஏற்று கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றேன். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ராஜன்செல்லப்பாவும் கலந்து கொண்டார்.

நாங்கள் இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். தற்போது சில பிரச்சனைகளுக்காக பிரிந்து செயல்படுகிறோம். அவர் மேயராக இருந்த போது நான் கவுன்சிலராக இருந்தவன்.

எனவே எதிரெதிரே சந்திக்கும்போது முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல முடியாது. எனவே அவரை பார்த்து வணக்கம் தெரிவித்தேன். அவரும் என்னுடன் நட்புடன் பேசினார். மற்றபடி இந்த சந்திப்பில் எந்தவித அரசியலும் இல்லை.


உண்மையான அ.தி.மு.க. எது என்பது ஒவ்வொரு தொண்டனுக்கும் தெரியும். ஓ.பி.எஸ். இருக்கும் இடம் தான் உண்மையான அ.தி.மு.க. இது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் ஒருசில காரணங்களுக்காக கட்சி இணைவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்கள்.

நேற்று நாகப்பட்டினத்தில் நடந்த ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதில் எப்போதுமே முதல்நபராக இருக்கிறேன்.

எனவே சசிகலா அணிக்கு ஒருபோதும் திரும்ப மாட் டேன். அ.தி.மு.க. அணிகள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் இணையும். அப்போது விலகி இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com