

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக செல்போனில் பேசிய விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதிகாரிகளை திருப்திப்படுத்த நிர்மலாதேவி மாணவிகளிடம் ஆசைவார்த்தை காட்டி பாலியல் ரீதியாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
அதிகாரி சந்தானம் கடந்த 18-ந்தேதி முதல் மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் முகாமிட்டு நிர்மலாதேவி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோரும் விசாரணை நடத்தினர்.
பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தேர்வு அலுவலர், பேராசிரியை நிர்மலாதேவி, தேவாங்கர், கல்லூரி மாணவிகள், முதல்வர், செயலாளர் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி உள்ள சந்தானம் தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ள பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 2 கட்ட விசாரணைகளில் நிர்மலாதேவி தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மேலும் மதுரை சிறையில் நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளது. பாலியல் வலைவீசப்பட்ட மாணவிகளும் நிர்மலா தேவி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தானத்திடம் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு அலுவலர் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது.
தற்போது வரை 75 சதவீத விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 2 வாரத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்ட அதிகாரி சந்தானம் இன்னும் சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கவர்னர் மாளிகையில் காலஅவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை விவரங்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியை சந்தானம் தொடங்கி உள்ளார்.