நிர்மலா தேவியிடம் சந்தானம் விசாரிக்க முடியுமா?

விசாரணை அதிகாரி சந்தானம் தரப்பில் சாத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. #AruppukottaiProfessor #NirmalaDevi
நிர்மலா தேவியிடம் சந்தானம் விசாரிக்க முடியுமா?
Published on

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு புறமும், கவர்னர் நியமனம் செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் மற்றொரு புறமும் விசாரித்து வருகிறார்கள்.

நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரித்து வருகிறார்கள். செவ்வாய் கிழமை (24-ந்தேதி) வரை நிர்மலா தேவி போலீசார் வசம் இருப்பார்.

இதற்கிடையே சந்தானம் கடந்த வியாழக்கிழமை மதுரை சென்று விசாரணையை தொடங்கினார். அவருக்கு உதவ பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பலகட்ட விசாரணையை நடத்தினார்கள். மாணவிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் உள்பட 20 பேரிடம் விசாரணை நடத்தி முடித்தனர்.

மதுரை சுற்றுலா மாளிகையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தினார்.

நேற்று மாலை பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். புகார் மனுக்களும் பெற்றார். அத்துடன் சந்தானம் குழுவின் முதல்கட்ட விசாரணை முடிந்தது.

சந்தானம் குழுவினர் தங்களது 2-வது கட்ட விசாரணையை வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறார்கள். அப்போது பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி உள்ளார். அவரை உறவினர்களும், வக்கீலும் சந்திக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

எனவே விசாரணை அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் பேராசிரியை நிர்மலாதேவியிடம் தற்போது விசாரணை நடத்த முடியாது. வருகிற 25-ந்தேதி பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அதன் பிறகு விசாரணை அதிகாரி சந்தானம் தரப்பில் சாத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

எனவே 26 அல்லது 27-ந் தேதிகளில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

சந்தானம் குழுவினர் மீண்டும் 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 2-வது கட்ட விசாரணையை நடத்த உள்ளனர். நிர்மலா தேவியிடம் விசாரித்து விட்டால் அவர்களது விசாரணை முழுமை பெற்று விடும் என்று கூறப்படுகிறது.

எனவே திட்டமிட்டபடி 30-ந்தேதிக்குள் கவர்னரிடம் சந்தானம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AruppukottaiProfessor #NirmalaDevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com