மணல் கடத்த பயன்படுத்திய 11 மாட்டுவண்டிகள் பறிமுதல்- 11 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் பகுதியில் மணல் கடத்த பயன்படுத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல் கடத்த பயன்படுத்திய 11 மாட்டுவண்டிகள் பறிமுதல்- 11 பேர் கைது
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் பகுதியில் அரசு அனுமதியின்றியும், வருவாய் துறையினர் மறைமுக ஆதரவோடும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் பெரம்பலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு லெப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, அத்தியூர், ஆடுதுறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அத்தியூர், லெப்பைக்குடிக்காடு வெள்ளாற்றங்கரையில் அரசு அனுமதியின்றி 10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்பட்டது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து மங்களமேடு போலீசார் அத்தியூர் பகுதியில் 9 மாட்டு வண்டிகளையும், லெப்பைக்குடிக்காடு பகுதியில் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அத்தியூர் குடிக்காட்டைச் சேர்ந்த பழனிவேல் (வயது48), ஆசைத்தம்பி (34), அத்தியூரைச் சேர்ந்த முத்துலிங்கம் (52), சுப்பிரமணி (48), ராஜேந்திரன் (61), முருகேசன் (38), பால்ராஜ் (46), தனபால் (32), பிச்சைப்பிள்ளை (40), லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (24), செந்தில்குமார் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com