மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் சென்னை கார் டிரைவர் வெட்டிக்கொலை

மணல் கடத்தலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் சென்னை கார் டிரைவர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுததியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் சென்னை கார் டிரைவர் வெட்டிக்கொலை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த குன்னுமுறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தினகரன் (வயது 35). அவரது மனைவி விமலா. மகன் சுதிஷ்(4), மகள் தஷ்மிதா(2), தினகரன் சென்னையில் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் ஊரில் இருந்தார். குன்னுமுறிஞ்சி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று தினகரன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ரிங்ரோடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் தற்காலிக மாற்றுப்பாதையான மண்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே உள்ள திறந்த வெளி பகுதியில், 3 பேர் கொண்ட கும்பல் தினகரனை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த தினகரன் பைக்கை கீழே விட்டுவிட்டு தப்பியோடினார்.

ஆனாலும் அவரை விரட்டிச் சென்று பிடித்த கும்பல் கொடுவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தினகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர், கொலையாளிகள் 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர். கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்புத்துலக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். வாகன சோதனைகள் நடந்தன.

கொலையாளிகள் 3 பேரும் அவலூர்பேட்டை சாலை வழியாக தப்பி செல்வதாக தகவல் கிடைத்தது. இதனால் செய்யாறு, சேத்துப்பட்டில் போலீசார் உஷார் படுத்தபட்டனர்.

செய்யாறு கோர்ட்டு அருகே வாகன சோதனையில் கொலையாளிகள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த அருண் (35), அருள் (34), மேல்குண்ணுமுறிஞ்சி பகுதியை சேர்ந்த கோபி (35) என தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘‘ஏரியில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளார். அந்த வகையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்கள் 3 பேரும் சேர்ந்து தினகரனை கொலை செய்து இருக்கலாம்’’ என்பது தெரியவந்தது.

மேலும் அருள் குடும்பத்தாருக்கும், தினகரனுக்கும் நிலத்தகராறு இருந்துவருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புள்ளதாக அருளின் தந்தை செல்வம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com