மணல் வினியோகத்தை அதிகப்படுத்தக்கோரி மணல், ஜல்லி, செங்கல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

மணல் வினியோகத்தை சீராக்க வேண்டும், மணல் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
மணல் வினியோகத்தை அதிகப்படுத்தக்கோரி மணல், ஜல்லி, செங்கல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Published on

சென்னை:

தமிழகத்தில் மணல் விற்பனை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் கட்டுமான தொழில்கள் முடங்கி விட்டன.

கட்டுமான தொழிலுக்கு மணல் முக்கியமாக இருப்பதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தேவையான அளவு மணல் வினியோகிக்கப்படவில்லை.

மணல் வினியோகத்தை சீராக்க வேண்டும் மணல் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும், அதிக அளவு மணல் லோடுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டிட தொழில் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ராதாகிருஷ்ணன், பொன் குமார், யுவராஜ், வி.என்.கண் ணன், சுரேஷ்கண்ணா, பிரகாஷ் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தில் பில்டர்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், மணல் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் எஸ்.யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:-

மணல் வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மணல் ஆன்லைன் மூலமாக விற்கப்போவதாக கூறி இருக்கிறார்கள். இதுவரையில் 30 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். மணலை எப்படி வழங்க போகிறார்கள் என்று தெரிய வில்லை. ஆற்றிலேயே வழங்குவார்களா? யார்டில் வினியோகிப்பார்களா? என்பது புரியவில்லை.

மணல் தேவையான அளவு வினியோகிக்கப்படாததால்தான் விலை அதிகரித்து வருகிறது. கட்டுமான தொழிலுக்கு தாராளமாக மணல் கிடைக்கும் பட்சத்தில் விலையேற்றம் குறைந்து இயல்பாக வந்து விடும். அரசு எதற்காக இந்த வி‌ஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கிறது என்று தெரியவில்லை.

இத்தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். கட்டுமான தொழில் சார்ந்த அனைத்து பிரதிநிதிகளையும் முதல்-அமைச்சர் அழைத்து பேச வேண்டும். மணல் பிரச்சினைக்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com