ஓமலூர் போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
ஓமலூர்:
சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இதேபோன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த நந்தினி(19). இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், நந்தினி வீட்டார் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நந்தினி தனது வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தார். தொடர்ந்து ஓமலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதே போன்று ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம் பட்டி பாம்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (24). நெசவு தொழிலாளியான இவரும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (19) என்ற பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் அம்ச வள்ளி 2 காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். மேலும் 2 காதல் ஜோடிகளின் உறவினர்களும் அனைத்து காவல் நிலையம் முன்பு கூடி வாய்த்தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

