சாம்பவர் வடகரையில் வீட்டில் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகை பறிப்பு

சாம்பவர் வடகரையில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகையை பறித்து சென்றனர்.
சாம்பவர் வடகரையில் வீட்டில் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகை பறிப்பு
Published on

சுரண்டை:

சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை தேரடி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது50). விவசாயி. இவரது மகள் ராமலட்சுமியை, அப்பகுதி லட்சுமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் கருப்பசாமி அவருக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கு அழைத்து வந்திருந்தார். 

இரவில் ராமலட்சுமி வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் திடீரென ராமலட்சுமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். பின்னர் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த ராமலட்சுமி திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டான். 

இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அதே பகுதி புளியம்பட்டி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி களஞ்சியம்(55) என்பவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த களஞ்சியம் கழுத்தில் கிடந்த 25 கிராம் நகையை பறித்தான். திடுக்கிட்டு விழித்த களஞ்சியம் கொள்ளையனிடம்  நகை சிக்காமல் இருக்க போராடினார். 

இதில் நகை அறுந்து பாதி நகை கொள்ளையனிடம் சிக்கியது. அந்த நகையுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். 

அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் சாம்பவர் வடகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வெட்டை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com