ஆசிரியர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமான மாணவிக்கு நீதிகேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சேலம் அருகே ஆசிரியர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமான மாணவிக்கு நீதிகேட்டு பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Published on

சேலம்:

சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி (வயது 45). இவர் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்தார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் உள்பட பலர் இன்று பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு கேட்டும், பள்ளியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியதுடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் அவர்கள் சமரசம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கீழ் தரமான செயல்களில் ஈடுபட்ட அந்த ஆசிரியரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறிய அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com