சேலத்தில் பிரபல ரவுடி மர்ம மரணம்

சேலம் அருகே பிரபல ரவுடி மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் உடையாப்பட்டியை அடுத்த அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 24).

பிரபல ரவுடியான இவர் மீது அம்மாப்பேட்டை, வீராணம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

இன்று காலை சரத்குமார் தனது வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உறவினர்கள் அங்கு வந்து சரத்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அம்மாப்பேட்டை போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சரத்குமார் உடலை மீட்டு மருத்துவபரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் எப்போதும் போதையில் இருப்பதாக கூறப்படுகிறது. குடிபோதையில் அவர் அந்த வழியாக சென்ற சேலம் - சென்னை எக்மோர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை. அந்த ரெயில் என்ஜின் டிரைவர் ஏத்தாப்பூர் ரெயில் நிலையத்தில் ஒருவர் அடிபட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சரத்குமார் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொன்று தண்டவாளம் அருகே பிணத்தை வீசி சென்றார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்கனில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல ரவுடி இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com