

கொண்டலாம்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி சங்ககிரி மெயின்ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே இன்று முதியவர் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் முதியவரிடம் விசாரணை நடந்தியபோது தான் சேலம் இரும்பாலை பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்றும், எனது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், எனக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார் என்றும் தெரிவித்தார்.
முதியவர் தெரிவித்த முகவரியில் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் அந்த பகுதியில் அவர் கூறியபடி யாரும் அங்கு இல்லை. எனவே, காயம் அடைந்த முதியவர் குறித்து சரியான விபரங்கள் கிடைக்காததால் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.