

சேலம்:
சேலம் பள்ளிக்கூடத்தானூர் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை, ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைகொடை வசூலிப்பதில் தகராறில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் குப்புசாமி, சுந்தரராஜன் ஆகியோரை கடந்த 2003-ம் ஆண்டு ஊர் மக்கள் சேர்ந்து ஓட ஓட விரட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். மொத்தம் 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 14 ஆண்டுகளாக சேலம் முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிபதி ரவீந்திரன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் சம்பந்தப்பட்ட 24 பேருக்கு வரிசையாக தண்டனை விபரங்களை அறிவித்தார்.
முதல் குற்றவாளிகளான பள்ளிக்கூடத்தானூர் பகுதியை சேர்ந்த நடசேன், ஜெகன், குமரவேல், சேகர், செல்வம், தியாகராஜன், செல்வராஜ், அண்ணாமலை ஆகிய 8 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதையடுத்து தர்மலிங்கம், செல்வம், குமரேசன், மாணிக்கம் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் கோவில் பூசாரி அருணாசலம், குப்பு, முருகேசன், மணிமாறன், கலைவாணன் ஆகிய 5 பேரை விடுதலை செய்தார். விஜயா, கிருஷ்ணம்மாள், மாது ஆகிய 3 பெண்களுக்கு ரூ.1000 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது 3 பேர் இறந்து விட்டனர். இதனால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பழனிவேல் மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளதால் அவரது வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.