

சேலம்:
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டடணி கட்சிகள் சார்பில் நேற்று (5-ந் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தி.மு.க.வினர், கூட்டணி கட்சியான காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., உள்பட ஏராளமான கட்சிகள் சாலை மறியல் போராட்டத்திலும், ஒரு சில இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சேலம் மாநகரில் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் ரெயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 678 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வீரபாண்டி ராஜா உள்பட 150 பேரை கைது செய்தனர். இதேபோன்று அயோத்தியாபட்டணம் சேலம் டவுன் ரெயில் நிலையம், தலைமை தபால் நிலையம், எஸ்.கொல்லப்பட்டி உள்பட 7 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட 1125 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகுடஞ்சாவடியில் உள்ள ரெயில் நிலையத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஏராளமானோர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதேபோன்று சேலம் புறநகர் மாவட்டங்களில் ஆத்தூர், ஓமலூர் உள்பட 36 இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்ட 1980 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 44 இடங்களில் ரெயில், சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலம் மாநகரில் 1125 பேரும், புறநகர் மாவட்ட பகுதிகளில் 1980 பேரும் என மொத்தம் 3105 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்பட 3105 பேர் மீது அனுமதியின்றி கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் பிரிவு உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.