

கோவை:
கோவை சாடிவயல் அருகே உள்ள சப்பாணிமலை தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி சின்னக்காள் (வயது 60). நேற்று இரவு இவரது வீட்டில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் படுத்து உறங்கினார். அதிகாலை மலையில் இருந்து இறங்கி தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை சின்னக்காள் அருகே வந்து அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் யானையிடம் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள தப்பி ஓடமுயன்றார். விரட்டி சென்ற யானை சின்னக்காளை காலால் மிதித்தது. இதில் சம்பவஇடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து காருண்யா நகர் போலீசார் மற்றும் பூலுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் யானை தாக்கி பலியான சின்னக்காளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.