இந்தியாவில் உர உற்பத்தி போதுமானதாக இல்லை - மத்திய மந்திரி தகவல்

‘இந்தியாவில் உர உற்பத்தி போதுமானதாக இல்லை’ என்று, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
சதானந்த கவுடா
சதானந்த கவுடா
Published on

புதுடெல்லி:

எப்.ஐ.சி.சி.ஐ. என்கிற வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘லீட்ஸ்2020’ என்கிற ‘மறுசீரமைப்புக்கான தொலைவுகள்’ குறித்த கருத்தரங்கு காணொலியில் நடைபெற்றது. இதில், லத்தீன் அமெரிக்க கரிபியன் அமர்வில் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா கலந்து கொண்டார். அப்போது அவர், 2024-ம் ஆண்டுக்குள் இந்திய மருந்தியல் துறை 65 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிலாக மாறும் என்று கூறினார்.

மருத்துவக் கருவிகள் தயாரிக்க 4 ஆலைகளையும், மருந்துகளை தயாரிக்க 3 ஆலைகளையும் அமைப்பதற்கான திட்டங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், புதிய உற்பத்தியாளர்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை பெறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

பொதுவான மருந்துகளை பெரும் அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், கொரோனா நோய் சிகிச்சைக்கு இந்தியாவின் எச்.சி.கியூ. மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் உலகளவில் அறியப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த மருந்துகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், இதன்மூலம் மருந்துகளின் நம்பகமான வினியோகஸ்தர் என்ற பெயரை இந்தியா எடுத்துள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவுக்கு வெளியே, அமெரிக்க எப்.டி.ஏ. விதிமுறைகளுக்கு உட்பட்ட அதிக மருந்து ஆலைகளை (262 ஆலைகள்) கொண்ட நாடு இந்தியா மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை பற்றி பேசுகையில், இந்தியாவில் இந்த துறையின் தற்போதைய சந்தை அளவு 165 பில்லியன் டாலர் என்றும், இது 2025-ம் ஆண்டில் 300 பில்லியன் டாலராக உயரும் என்றும் கூறினார்.

உரங்கள் உற்பத்தி பற்றி பேசும்போது, “உரத்துறையும் இந்தியாவில் கவர்ச்சிகரமான துறைதான். விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் உரங்களுக்கு பெரும் தேவை ஏற்படுகிறது. ஆனாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லை. நாங்கள் யூரியா, ‘பி அன்ட் கே’ உரங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். உதாரணமாக கடந்த 2018-2019-ம் ஆண்டில் 7.5 மில்லியன் (75 லட்சம்) டன் யூரியா, 6.6 மில்லியன் டன் டி.ஏ.பி., 3 மில்லியன் டன் எம்.ஓ.பி., மற்றும் அரை மில்லியன் டன் என்.பி.கே. உரங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com