சபரிமலை பயணமும் - கட்டுப்பாடுகளும்

சபரிமலைக்கு வழிபாடு செய்ய செல்ல விரும்பும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். #SabarimalaVerdict #Sabarimala
சபரிமலை பயணமும் - கட்டுப்பாடுகளும்
Published on

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பெண்களையும், அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை செல்பவர்களும் இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபற்றி ஆன்மீகவாதிகள் கூறும்போது, கோவிலுக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால் இயற்கையிலேயே பெண்ணாக படைக்கப்பட்டவர்களுக்கும், ஆணாக படைக்கப்பட்டவர்களுக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துதான் ஆலய வழிபாட்டிலும் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்றனர்.

சபரிமலையானது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அது சங்க காலத்தில் சேரர்களின் வழிபாட்டு தலமாக விளங்கியது.

சுவாமி அய்யப்பன் சார்ந்த வரலாற்று கதைகளில் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரணமாக சுவாமி அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமும் சொல்லப்படுகிறது.

கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது வன விலங்குகளால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பூப்படைந்த பெண்கள் இக்கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது.

10 வயது வரையுள்ள பெண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்வதில்லை.

சபரிமலை பயணம் மேற்கொள்வதற்கு பக்தர்கள் 41 நாட்கள் கடினமான விரதம் இருக்க வேண்டும். இதற்காக பக்தர்கள் விரதத்தின் தொடக்க நாளன்று உத்திராட்சமோ அல்லது துளசிமணி மாலைகளோ அணிய வேண்டும். 41 நாட்களும் மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, புகைப்பிடித்தல், பெண்கள் தொடர்பு, அநாகரீகமான பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காலணிகள் அணியக்கூடாது.

மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

கருப்பு, நீல நிறம் அல்லது குங்குமப்பூ கலரில் பாரம்பரிய துணிகள் மட்டுமே அணிய வேண்டும். தற்போது விரதங்களுக்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் குறைந்து விட்டாலும் பொதுவான விதிமுறைக்கு உட்பட்டு விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

சில தீவிர பக்தர்கள் வீட்டில் இருந்து வெளியேறி தனி இடத்தில் 41 நாட்கள் கடும் விரதம் கடைபிடிப்பார்கள். முன்பு ‘பெரிய பாதை’ என்ற ஒரு வழி மட்டுமே இருந்தது. அடர்ந்த காட்டின் வழியே செல்ல வேண்டும். இதில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தது. வெள்ளை நிற ஆடைகள் வெகுதூரம் வரை தெரியும் என்பதால் வனவிலங்குகளிடம் இருந்து தப்ப குறைந்த ஒளிசிதறல் கொண்ட கருப்பு, நீலம், சிவப்பு நிற துணிகளை பயன்படுத்தினர்.

முந்தைய காலத்தில் காட்டு வழியாக நடந்து சென்று பம்பா நதியை அடையவே வெகுநாட்கள் ஆகும். தற்போது பம்பா நதிவரை வாகனங்கள் செல்வதுபோல் முந்தைய காலத்தில் செல்ல வழியில்லை.

இதனால் முந்தைய காலத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்கள் ஒருபுறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடியை எடுத்துச் சென்றனர்.

10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது கடினம். எனவேதான் தடை விதித்தனர். ஆனால் இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் சமம் என்ற கோ‌ஷம் ஓங்கி வருகிறது.

சபரிமலை பயணம் என்பது அடர்ந்த வனப்பகுதி வழியாக 45 கி.மீ. தூரமாக இருந்தது. ஆனால் இப்போது காட்டு வழிப்பாதை மேம்படுத்தப்பட்டு இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சாலையாக மாறி விட்டன.

சபரிமலை விரதமும், கட்டுப்பாடுகளும் பக்தர்களை சபரிமலை பயணத்துக்கு தங்களை தயார் செய்வதாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் விரத முறைகள் மாறிவிட்டன. கட்டுப்பாடுகளும் தளர்ந்து விட்டன. அவரவர் விருப்பப்படி ஒருநாள் ஒரு வாரம் என விரதம் இருந்து சபரிமலை சென்று திரும்புகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தற்போது பெண்களை கோவிலுக்கு அனுமதித்தாலும் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது இயலாத ஒன்றாகும். கழுத்தில் மாலையுடன் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்பவர்கள் மட்டுமே 18 படிகள் வழியாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு 4½ கோடி முதல் 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இதன்மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

அதிக வருவாய் கிடைப்பதால் கேரள அரசாங்கமும் அய்யப்பன் கோவில் நடைமுறைகளில் மாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் வரவேற்கிறது. தற்போது பெண்களும் அனுமதிக்கப்படுவதால் வருவாய் மேலும் இரட்டிப்பாகும் என்பதால் கேரள அரசு வரவேற்கிறது. ஆனால் ஆன்மீகவாதிகளும், தீவிர பக்தர்களும் பெண்கள் அனுமதிப்பதை ஏற்கவில்லை. விரதத்தின் புனிதம் கெட்டுவிடும் என்ற அதிருப்தி நிலவுகிறது. #SabarimalaVerdict #Sabarimala

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com