ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் 16-ந்தேதி திறப்பு

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் 16-ந்தேதி திறப்பு
Published on

திருவனந்தபுரம்:

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும்.

இந்த நிலையில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

அன்று சபரிமலை கோவில் புதிய தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு பதவி ஏற்கிறார். அன்று முதல் அடுத்த ஓர் ஆண்டுக்கு அவர் தந்திரியாக பணியாற்றுவார். சபரிமலை கோவில் தந்திரியாக செங்கண்ணூர் கண்ட ரரு குடும்பத்தை சேர்ந்தவர்களே பரம்பரை, பரம்பரையாக தந்திரி பதவி வகித்து வருகிறார்கள்.

மறுநாள் 17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறுகிறது. நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டி லட்சார்ச்சனையும் அன்று தொடங்குகிறது.

21-ந்தேதி வரை படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசபூஜை, களபாபிஷேகம் நடைபெறுகிறது. 21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 6-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com