சபரிமலையில் 2 நாளில் 70 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் 2 நாளில் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்வதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில்
Published on

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மறுநாள் (17-ந்தேதி) மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜை முதல் மகரவிளக்கு பூஜை வரை 2 மாத காலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலில் குவியத்தொடங்கி உள்ளனர்.

இந்த ஆண்டு சபரிமலை ஐதீகத்தை கடைபிடிக்கும் விதத்தில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

மேலும் சபரிமலையில் பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்வதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய வந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பவும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பெண் போலீசார் நிலக்கல், பம்பையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலை வரும் பெண் பக்தர்களை பம்பை கணபதி கோவில் பகுதியில் போலீசார் தடுத்துநிறுத்தி அவர்களது வயதை ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நேற்று திருப்பி அனுப்பப்பட்டார். இந்த கண்காணிப்பு பணிக்காக சிறப்பு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக சபரிமலையில் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முதல் நாள் மட்டும் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதற்கு அடுத்த 2 நாளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்ட கோவில் நடை தற்போது 3 மணிக்கே திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறுகிறது. வழக்கமாக காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்ய முடியும். கூட்டத்தை கருத்தில் கொண்டு 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சபரிமலை கோவில் வருமானமும் அதிகரித்து உள்ளது. முதல் நாளில் ரூ.3.13 கோடியாக இருந்த வருமானம் அடுத்த 2 நாட்களில் மேலும் அதிகரித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதேசமயம் பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு வாகனங்கள் மீண்டும் நிலக்கல் திரும்பி விடவேண்டும். பக்தர்களை மீண்டும் அழைப்பதற்கு அந்த வாகனங்கள் செல்லலாம். வழியில் எந்த இடத்திலும் அந்த வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிபந்தனைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com