

திருவனந்தபுரம்:
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 16-ந்தேதி முதல் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசேஷ பூஜைகள் நடக்கிறது. இதற்காக கோவில் நடை டிசம்பர் மாதம் 26-ந்தேதி வரை திறந்திருக்கும்.
இதையொட்டி சபரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை பிரசாதமான அரவணை, அப்பம் தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பத்தனம் திட்டை கலெக்டர் கிரிஜா ஆய்வு செய்தார். இதற்காக அவர் பம்பை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள போலீஸ் துறை சார்பில், பக்தர்கள் நேர்வழி தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து காலதாமதம் இன்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு பக்தர்களிடம் அதிக வரவேற்பும் உள்ளது. சபரிமலை ஆன்லைன் தரிசன முன்பதிவு குறித்து கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது;-
‘விர்சுவல் க்யூ’ என்ற நேர்வழி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை 3 தினங்களில் 4 லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டிசம்பர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 தினங்களும், மகரவிளக்கு பூஜையையொட்டி ஜனவரி 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும் நேர்வழி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் நேர்வழி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கு கட்டணம் ஏதும் இல்லை.
நடப்பாண்டில் 16 லட்சம் பேருக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சபரிமலை வரும் பக்தர்களுக்கு துணி பைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1600 அய்யப்ப சேவா சங்கத்தினரும், தினக்கூலி ஊழியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவர்கள் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டுவந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு இலவசமாக துணி பைகளை வழங்குவார்கள்.
சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராடும் போது சோப்பு, சேம்பூ, எண்ணை போன்றவைகளை பயன்படுத்த கூடாது. மேலும் பழைய துணிகளையும் பம்பை ஆற்றில் வீசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பக்தர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 6 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.