

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பூஜைகளில் மகர விளக்கு பூஜையும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்கு சில நாட்களே இருப்பதால் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகர விளக்கு பூஜை யின்போது, சுவாமி அய்யப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி ஊர்வலம் இன்று (13-ந் தேதி) பகல் 12 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து தொடங்கியது. மேளதாளம் முழங்க நடைபெறும் இந்த ஊர்வலம் 15-ந் தேதி மாலையில் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். அதன்பிறகு 18ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறும். மகர விளக்கு பூஜையின்போது அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதிதரிசனம் நடைபெறும். சுவாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் மகர ஜோதி தரிசனத்தை காணவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
மகர விளக்கு பூஜையையொட்டி தற்போதே சபரிமலையில் அதிக அளவு பக்தர்கள் குவிந்து உள்ளனர். ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் ஆங்காங்கே முகாமிட்டும் உள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் அவர்களை குழு குழுவாக போலீசார் சன்னிதானம் நோக்கி அனுப்பி வருகிறார்கள். 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக சுவாமி அய்யப்ப னுக்கு மகர சங்கரம பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி அதிகாலை 2.09 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெறுகிறது. அதிகாலையில் இந்த பூஜை நேரம் வருவதால் வருகிற 14-ந் தேதி இரவு 11 மணிக்கு வழக்கமாக அடைக்கப்படும் கோவில் நடை அடைக்கப்பட மாட்டாது.
மகர சங்கரம பூஜை நடைபெற்ற பிறகு கோவில் நடை அடைத்து விட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.