

திண்டுக்கல்:
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து, கொரோனா பாதிப்பால் இறந்த
ஊழியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும், தமிழ்நாடு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தில், சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் அருண் தலைமையில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்
அலுவலர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, பணியை புறக்கணித்தனர். அதேபோல் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு வட்டார சங்க தலைவர் ராஜ் மோகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முருகேசன், சங்க பொருளாளர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார தலைவர் ரகுபதி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் செல்லையா முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறையின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.