ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

சிவகாசி:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும்.

பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட நான்கு ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் யூனியன் மேலாளர் முத்துராமன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் கிளை செயலாளர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. கிராம ஊராட்சி செயலர்களுக்கு ஏனைய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் வழங்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 20 பெண்கள் உள்பட 51 பேர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com