

போத்தனூர்:
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை ஈச்சனாரியில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த கிரிஸ்பட் என்பவர் கோவைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மதுக்கரை மிலிட்டரி கேம்ப் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவைக்கு வந்த ஹக்கீம் என்பவரது காரை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 52 ஆயிரத்து 400 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுக்கரையை அடுத்த குமிட்டிபதி அருகே நடந்த சோதனையில் சசிகுமார் என்பவர் காரில் கொண்டு சென்ற 2 லட்சத்து 13 ஆயிரத்து 300 ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது அவர் முகவரியை கொடுக்க மறுத்ததாகவும், ஆவணங்களை காட்டி பணத்தை வாங்கி கொள்வதாகவும் கூறிசென்றுள்ளார். செல்போன் எண் கூட அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட 4 லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.