மாவட்டத்தில் 3 இடங்களில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் 3 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் 3 இடங்களில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
Published on

நாமக்கல்:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு வளையப்பட்டி-காட்டுபுத்தூர் சாலையில் பறக்கும் படையினர் அரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோகனூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அருகே உள்ள பொம்மம்பட்டி அல்லாபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ரூ.60 ஆயிரத்துடன் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் காதப்பள்ளி பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விஜயின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு விஜய் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக பறக்கும் படை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம் தலைமையில் விரைந்து சென்ற அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம், அர்ஜூனன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்களிடம் ரூ.65 ஆயிரம் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் அவர்களிடம் இருந்து பூத்சிலிப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டு இருந்தபோது அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பில் மொளசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் 3 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com