சமூக வலை தளங்களில் பரவியது: வெற்றிலைக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதாக வதந்தி

வெற்றிலைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வீண் வதந்தியே. அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று ஜி.எஸ்.டி. ஆணையர் கென்னடி கூறினார்.
சமூக வலை தளங்களில் பரவியது: வெற்றிலைக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதாக வதந்தி
Published on

சென்னை:

நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெற்றிலைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான தகவல்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தீயாக பரவியது. வெற்றிலைக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.

இதனால் வெற்றிலை வியாபாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கூறப்பட்டது. இந்த வரி விதிப்பை வெற்றிலை விவசாயிகளும், வியாபாரிகளும் கண்டித்தனர். இது பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

இந்த நிலையில் வெற்றிலைக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. ஆணையர் கென்னடி கூறும்போது, கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பிலேயே வெற்றிலைக்கு வரி விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக வரிசை எண்.93-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வெற்றிலைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வீண் வதந்தியே. அதனை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com