திருமங்கலம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலக பெண் உதவியாளர் மீது தாக்குதல்- தற்காலிக ஊழியர் கைது

ஆர்.டி.ஓ. அலுவலக இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலக பெண் உதவியாளர் மீது தாக்குதல்- தற்காலிக ஊழியர் கைது
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்வரன். இவருடைய மனைவி முத்து சித்ரா (வயது 29). ஆலம்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இதே அலுவலகத்தில் ஆலம்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த அழகு மகன் வீரவல்லவ வர்மன் (25) தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் உரிமம் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது உண்டு.

அப்படி வரும் உரிமங்களின் உரிமையாளர்களை வீரவல்லவ வர்மன் தனியாக சந்தித்து பணம் பெறுவதாக, இளநிலை உதவியாளர் முத்து சித்ராவுக்கு புகார் வந்தது.

இது பற்றி வீரவல்லவ வர்மனிடம் அவர் கேட்டார். அப்போது தன்னை கையால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக வீரவல்லவ வர்மன் மீது திருமங்கலம் தாலுகா போலீசில், முத்து சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீரவல்லவ வர்மனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com