

புதுடெல்லி:
சாலையில் பயணம் செய்யும்போது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் சுங்கச் சாவடிகளை பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ வசூலிக்கப்படும். அதேபோல், இருசக்கர வாகனங்கள், லாரி, கார் என ஒவ்வொரு வாகனத்திற்கும் தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விளக்கத்தில் இந்த தகவல் வெளியானது.
மத்திய அரசு அளித்த விளக்கத்தில், ”சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம் வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.