மத்திய மந்திரிசபைக்குள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ராஜ்ஜியம் - ராகுல் நேரடி தாக்கு

மத்திய மந்திரிசபைக்குள் இடம்பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருவதன் மூலம் அரசின் அமைப்புகளை பிரதமர் மோடி அவமதித்து விட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #rahulgandhi #rss
மத்திய மந்திரிசபைக்குள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ராஜ்ஜியம் - ராகுல் நேரடி தாக்கு
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், தவாங்கரே மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிசபைக்குள் இடம்பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருவதன் மூலம் அரசின் அமைப்புகளை பிரதமர் மோடி அவமதித்து விட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று தவாங்கரே மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் எதிர்த்தார். நிதி மந்திரி உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபைக்கும் தெரியாத வகையில் பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு முன்னால் அனைத்து மந்திரிகளும் அறைக்குள் போட்டு பூட்டி வைக்கப்பட்டனர். அவர்களில் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். ஆனால், வங்கி கடன்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள 15 பெரிய தொழில் நிறுவனங்களால் உறிஞ்சப்படுகின்றன. அனில் அம்பானிக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அவருக்கு உதவுவதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்கியுள்ளது.

இதுபோன்ற கட்டமைப்பால் நமது வங்கிமுறை நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியும், மெகுல் சோஸ்க்கியும் யார்? ரிசர்வ் வங்கி போன்ற நிதி அமைப்புகளை நீங்கள் மதிக்காதபோது இதைப்போன்றவர்கள் உருவாகிறார்கள். தற்போது பியூஷ் கோயல் தொடர்பான ஊழலும் வெளிவர தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்ந்துகொண்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை அவமதித்து சீர்குலைப்பதை தவிர இந்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #rahulgandhi #rss 

X

Maalai Malar
www.maalaimalar.com