

கன்னியாகுமரி:
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் 5 நாள் பயணமாக வருகிற 6-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
6-ந் தேதி மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் அன்று மாலை 4.25 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6.25 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வருகிறார். அங்கு அவருக்கு விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் வரவேற்பு அளிக்கிறார்கள். இரவு அங்கு தங்குகிறார்.
7 மற்றும் 8-ந் தேதிகளில் தேதிகளில் விவேகானந்தா கேந்திராவின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
9-ந் தேதி காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அதன்பிறகு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு தனிப்படகில் செல்கிறார்.
காலை 9 மணிக்கு பாரத பரிக்கிராம பாதயாத்திரை என்ற பெயரில் 22 ஆயிரம் கிலோ தூரம் நடைபயணம் மேற்கொண்ட 74 வயதான சீதாராம் சுவாமிஜி தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோகன்பகவத் பங்கேற்று பாதயாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.
நிகழ்ச்சியையொட்டி சீதாராம் சுவாமிஜி பகவதி அம்மன் கோவில் உள்பிரகாரத்தை 108 முறை வலம் வந்து தரிசனம் செய்கிறார். அவர் நடைபயணத்தின்போது ஏந்தி வந்த கொடியை முக்கடல் சங்கமத்தில் சமர்ப்பணம் செய்கிறார்.
மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கும் சத்சங்கம் என்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்று பேசுகிறார். இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்.
10-ந் தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.