ரூ.62 லட்சம் தங்கத்தை தூளாக்கி காலுறைக்குள் மறைத்து கடத்தல்

தங்கத்தை தூளாக்கி, பொட்டலங்களாக காலுறை (சாக்ஸ்) மற்றும் மூட்டு வலிக்கான உறையில் மறைத்து கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
Published on

சென்னை:

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.62 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை தூளாக்கி, பொட்டலங்களாக காலுறை (சாக்ஸ்) மற்றும் மூட்டு வலிக்கான உறையில் மறைத்து கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த அபூபக்கர் (வயது 49) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் அபூபக்கரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் காலில் அணிந்து இருந்த காலுறை (சாக்ஸ்) மற்றும் மூட்டு வலிக்கான உறை ஆகியவற்றில் தங்கத்தை தூளாக்கி பொட்டலங்களாக மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.62 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அபூபக்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com